ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Jan 2021 8:16 AM IST (Updated: 27 Jan 2021 8:16 AM IST)
t-max-icont-min-icon

‘ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்' என எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளைய தினம் (இன்று) திறந்து வைக்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

இதை விட அரசு செலவில் தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மம் என்ன? அதற்கு யார், யாரெல்லாம் காரணம்? என்பதை 4 ஆண்டுகள் கழித்தும் கண்டுபிடிக்க முடியாத, கண்டுபிடிக்க விரும்பாத ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைப்பதற்கான அடிப்படை தார்மீக உரிமை இருக்கிறதா? என்பது தான் நாட்டு மக்களும், ஜெயலலிதா விசுவாசிகளும் இப்போது எழுப்புகின்ற முக்கிய கேள்வியாக இருக்கிறது.

உள்ளம் உறுத்தவில்லையா?

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 10-வது முறையாக காலநீட்டிப்பு வழங்கி இருக்கிறது. அதாவது நீட்டிப்பு வழங்குவதன் மூலமாக உரிய நீதி கிடைப்பதை, மர்மமும், உண்மையும் வெளிச்சத்திற்கு வருவதை, கால வரையறை இன்றித் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது இந்த அரசு.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்ல. இன்றைக்கு துணை முதல்-அமைச்சராக இருக்கிற ஓ.பன்னீர்செல்வம் தான், ஜெயலலிதா நினைவிடத்தில் போய் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்துவிட்டு, இப்படி சொன்னார். இவரின் வாயை அடைப்பதற்காகவும், தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தான், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் எடப்பாடி பழனிசாமியால் அமைக்கப்பட்டது. எந்த குற்றச்சாட்டை அவர் எழுப்பினாரோ, அந்த குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், இதுவரை நேரில் சென்று வாக்குமூலம் அளித்து, மரண விவரம் வெளிவர உதவாத ஓ.பன்னீர்செல்வத்துக்கு, ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புவிழாவுக்கு முன்னிலை வகிக்க உள்ளம் உறுத்தவில்லையா?

ஜெயலலிதாவின் விசுவாசிகள் உணர்வார்கள்

இதோ இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. நாட்டு மக்களிடம் நாடகம் ஆடுவதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்டுகிறோம் என்று இறங்கி இருக்கிறார்கள். ஜெயலலிதா மீது உள்ளார்ந்த அக்கறை, அன்பு, அவர் மீதான மரியாதை இருந்திருக்குமானால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து, அதில் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டும். அதைச் செய்துவிட்டு நினைவகம் கட்டியிருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அதைச் செய்யவில்லை.

2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி (இன்று) ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவுக்கு உண்மையாக இல்லாத 2 நபர்களால் ஜெயலலிதாவின் நினைவகம் திறக்கப்படுவது அந்த ஜெயலலிதாவுக்கே செய்யும் துரோகம் ஆகும். இந்த துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள், ஜெயலலிதாவின் விசுவாசிகள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும்...

கிடைத்த பதவியை வைத்து தமிழ்நாட்டைச் சூறையாடிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கும்பல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மண்ணைக் கவ்வ இருக்கிறது. இதை உணர்ந்த காரணத்தால் டெபாசிட் வாங்கவாவது பயன்படட்டும் என்பதற்காக ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டித் திறப்புவிழா செய்கிறார்கள். இந்த கும்பலுக்கு மூடுவிழா நடத்த மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம், கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் என அத்தனை கிரிமினல் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தருவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story