இந்து அமைப்பினர் திடீர் சாலை மறியல்


இந்து அமைப்பினர் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Jan 2021 5:22 PM GMT (Updated: 31 Jan 2021 5:23 PM GMT)

அரக்கோணத்தில் இந்து அமைப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரக்கோணம்

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு காணிக்கை அளிக்க வேண்டிய வாசகங்கள் அச்சிடப்பட்ட பேனர் இந்து அமைப்பினர் சார்பில் அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் அம்பேத்கர் சிலை அருகில் வைக்கப்பட்டு இருந்தது. 

அந்தப் பேனரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜியிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அந்தப் பேனர் அகற்றப்பட்டது. 

இதையறிந்த ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. ஆகிய இந்து அமைப்பினர் திரண்டு சுவால்பேட்டையில் திருத்தணி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்கள், எனக் குற்றம் சாட்டினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார், அங்குச் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அதில் சமரசம் ஏற்பட்டதும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்தணி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Next Story