தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2021 4:15 PM GMT (Updated: 2 Feb 2021 4:15 PM GMT)

வாணியம்பாடியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசாா் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாணியம்பாடி

வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி, வெலகல்நத்தம் பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது. 

இதில்  பாதிக்கப்பட்டவர்கள் வாணியம்பாடி, ஆலங்காயம், திம்மாம்பேட்டை, நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். 

இந்த நிலையில் வாணியம்பாடி வளையாம்பட்டு பைபாஸ் மேம்பாலத்தில் வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 21) என்பவர் பிடிபட்டார். 

அவர் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரை சேர்ந்த பிரவீன் என்பவரையும் பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் சேர்ந்து ஆம்பூர் பச்சகுப்பம் மேம்பாலத்தில் இருந்து வெலக்கல்நத்தம் வரை தினமும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள், மூதாட்டிகளை நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டதும், நகைகளை கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் விற்பதும் தெரியவந்தது. 

இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, மோட்டார ்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story