2 வீடுகளில் புகுந்து 40 பவுன் நகை, ரூ.1¾ லட்சம் கொள்ளை: 6 பேரை உருட்டு கட்டையால் தாக்கி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்


2 வீடுகளில் புகுந்து 40 பவுன் நகை, ரூ.1¾ லட்சம் கொள்ளை: 6 பேரை உருட்டு கட்டையால் தாக்கி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
x
தினத்தந்தி 4 Feb 2021 8:55 PM GMT (Updated: 4 Feb 2021 8:55 PM GMT)

தலைவாசல் அருகே வீரகனூரில் 2 வீடுகளில் புகுந்து 40 பவுன் நகை, ரூ.1¾ லட்சத்தை 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைவாசல், 

தலைவாசல் அருகே வீரகனூரில் 2 வீடுகளில் புகுந்து அங்கிருந்த 6 பேரை உருட்டு கட்டையால் தாக்கி 40 பவுன் நகை, ரூ.1¾ லட்சத்தை 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் பேருராட்சி ராயர்பாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் தீபன் (வயது 30), தனியார் பள்ளியில் இயக்குனராக உள்ளார். இவர் தனது மனைவி திவ்யா (25), தாயார் கலைச்செல்வி (53), மகள்கள் சரிகா (4), ஜெனிதா (1) ஆகிய 5 பேருடன் வசித்து வருகிறார். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் நள்ளிரவு 1 மணிக்கு தீபனின் வீட்டுக்கு வந்தனர். அங்கு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆட்கள் நடமாட்டத்தை கண்டு விழித்துக்கொண்ட கலைச்செல்வியை அவர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கினர்.
 
இதனிடையே கலைச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தீபன், அவருடைய மனைவி திவ்யா ஆகியோரையும் அந்த கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியது. பின்னர் அவர்கள் 3 பேரையும், படுக்கை அறைக்கு கூட்டிச்சென்றனர். அங்கு திவ்யாவிடம் இருந்த தாலிக்கொடி, தோடு மற்றும் கலைச்செல்வியிடம் இருந்த நகைகள் என 24 பவுன் நகைகளை அந்த கும்பல் பறித்தது.

அதன்பிறகு வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 பவுன் நகையையும் அந்த கும்பல் கொள்ளையடித்தது.. மேலும், கலைச்செல்வி, திவ்யா ஆகியோரின் செல்போனையும் அவர்கள் பறித்து சென்றனர்.

பின்னர் அதே பகுதியில் உள்ள பக்கத்து வீட்டுக்கு அந்த கும்பல் சென்றது. அங்கு அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதியும், விவசாயியுமான குமாரசாமி (72) தனது மனைவி அமிர்தம் (65), மகன் வாசுதேவன்(44) ஆகியோருடன் வசித்து வந்தார். அவர்கள் 3 பேரும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த நிலையில் அந்த கும்பல் வந்ததால் அவர்களது வீட்டில் வளர்த்து வந்த நாய் குரைத்தது.

நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் குமாரசாமியும், அவரது மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த அந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், தம்பதியை உருட்டு கட்டையால் தாக்கி வீட்டுக்குள் இழுத்து சென்றனர். அங்கு தூங்கி கொண்டிருந்த மகன் வாசுதேவனையும் கட்டையால் தாக்கி அவரை மட்டும் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். 

அதன்பிறகு வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.54 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதனிடையே அந்த கும்பல் கொள்ளையடித்த முதல் வீடான தீபனின் வீட்டில் அவர் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதே நேரத்தில் குமாரசாமியும் போலீசாருக்கு கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அருகருகே உள்ள 2 வீடுகளில் 40 பவுன் நகை, ரூ.1¾ லட்சம் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திற்கு ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் விரைந்து சென்று விசாரித்தனர்.

இதனிடையே தகவல் அறிந்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா  கனிக்கர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் விவசாய நில பகுதியில் ஓடிச்சென்று நின்று விட்டது.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

வீரகனூர் பகுதியில் அருகருகே உள்ள 2 வீடுகளில் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று 6 பேரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story