வையம்பட்டி அருகேமின்சாரம் பாய்ந்து விவசாயி பலி; பசுமாடும் செத்தது


வையம்பட்டி அருகேமின்சாரம் பாய்ந்து விவசாயி பலி; பசுமாடும் செத்தது
x
தினத்தந்தி 25 Feb 2021 10:05 PM GMT (Updated: 25 Feb 2021 10:05 PM GMT)

வையம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.பசுமாடும் செத்தது.

வையம்பட்டி அருகேமின்சாரம் பாய்ந்து விவசாயி பலி; பசுமாடும் செத்தது
வையம்பட்டி, பிப்.26-
வையம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
விவசாயி 
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த தவளவீரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணகவுண்டனூரைச் சேர்ந்தவர் ராகவன் (வயது 43). இவர் சொந்தமாக ஆடு மற்றும் மாடு வைத்து வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை அவருடைய வீட்டின் அருகே நின்றிருந்த பசு திடீரென சத்தம் போட்டது.
வீட்டினுள் இருந்த ராகவன் உடனே வெளியே ஓடி வந்து பார்த்தபோது, பசு மீது கேபிள் டி.வி. வயர் அறுந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பதற்றத்தில், பசுவை நோக்கி ஓடிய போது, அவர் அந்த வயரை மிதித்துவிட்டார்.
மின்சாரம் பாய்ந்து பலி
இதில் ராகவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பசுவும் பரிதாபமாக செத்தது. இதைப்பார்த்த குடும்பத்தினர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர்.
பின்னர் இதுபற்றி வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வையம்பட்டி போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராகவன் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு மின்கம்பத்தில் உள்ள மின்கம்பியின் மீது உட்கார்ந்து இருந்த காகம் மின்சாரம் பாய்ந்து கீழேவிழுந்து இறந்ததும், அப்போது, ஏற்பட்ட மின்கசிவு, மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் டி.வி. வயரின் இணைப்பு கம்பியில் பாய்ந்து, அது அறுந்து பசு மீது விழுந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story