பவானி அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதி பெண் பலி; 2 மகன்கள்-2 மகள்கள் காயம்


பவானி அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதி பெண் பலி; 2 மகன்கள்-2 மகள்கள் காயம்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:07 PM GMT (Updated: 25 Feb 2021 10:07 PM GMT)

பவானி அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதி பெண் பலியானார். இந்த விபத்தில் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் காயம் அடைந்தனர்.

பவானி
அந்தியூர் மைக்கேல்பாளையம் கே.மேட்டூர் அயன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மனைவி சரஸ்வதி (வயது 52). இவர்களுடைய மகன்கள் வீரமுத்து (28), சங்கர் (26), மகள்கள் ரசிகா (22), அம்சா (28). இவர்கள் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காரில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். காரை வீரமுத்து ஓட்டினார். 
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த தொட்டிபாளையம் பனங்காட்டூர் காலனி வாய்க்கால் பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை வீரமுத்து இடதுபுறமாக திருப்பினார். இதில் கார் நிலைதடுமாறி வாய்க்கால் கரையின் தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சரஸ்வதி படுகாயம் அடைந்தார். சங்கர், வீரமுத்து, ரசிகா, அம்சா ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சரஸ்வதியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story