ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரால் பரபரப்பு - போக்குவரத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து போலீசார் மீட்டனர்


ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரால் பரபரப்பு - போக்குவரத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து போலீசார் மீட்டனர்
x

ஆவடி பஸ் பணிமனையில் மின்விளக்கு கோபுரத்தில் மளமளவென ஏறிய ஓய்வு பெற்ற கண்டக்டரை போக்குவரத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து போலீசார் பத்திரமாக மீட்டனர்.

ஆவடி,

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் நேற்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆவடி பஸ் பணிமனையில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பஸ்சில் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று மாலை ஆவடி பஸ் பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 65 வயது மதிக்கத்தக்க ஒருவர், திடீரென பஸ் பணிமனைக்குள் புகுந்து அங்கிருந்த சுமார் 100 அடி உயரமுள்ள மின்விளக்கு கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்.

இதைபார்த்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், உடனடியாக அவரை காப்பாற்றுவதற்காக மின்விளக்கு கோபுரத்தில் ஏறினர். அதற்குள் அவர், மளமளவென மின்விளக்கு கோபுர உச்சிக்கு சென்றுவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து அங்கிருந்த போக்குவரத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து போலீசாரும் மின்விளக்கு கோபுரத்தில் ஏறி, அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி வந்தனர்.

விசாரணையில் அவர், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தங்கமணி(வயது 65) என்பதும், ஆவடி பஸ் பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றதும் தெரிந்தது.

தங்கமணி, கடந்த 2009-ம் ஆண்டு தன்னுடைய மகனின் படிப்புக்காக ஆவடியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கல்விக்கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை படிப்படியாக கட்டிவந்த நிலையில் திடீரென வங்கி நிர்வாகம் பணம் கட்டவில்லை என்று கூறி கடந்த ஜனவரி மாதம் அவரது வங்கி கணக்கை முடக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 2 மாதங்களாக அவருடைய ஓய்வூதிய பணத்தைகூட எடுக்க முடியாமலும், குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாமலும் அவதிப்பட்டு வந்த அவர், மனமுடைந்து ஆவடி பஸ் பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நேரத்தில் மின்விளக்கு கோபுரத்தில் ஏறியது தெரியவந்தது.

பின்னர் அவரை ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story