தூத்துக்குடியில் 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடியில் 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி, பிப்:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அரசு பஸ்களை இயக்கினர். பெரும்பாலான பஸ்கள் இயங்காததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். ஆங்காங்கே பஸ் நிறுத்தங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்து இருந்து பஸ்களில் ஏறி சென்றனர். இதனால் கூடுதல் பஸ்களை இயக்குவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன்படி தற்காலிகமாக டிரைவர், கண்டக்டர் தேர்வு தீவிரமாக நடந்தது. சுமார் 50 பேர் வரை தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் டவுன் பஸ்களை இயக்க அறிவுறுத்தப்பட்டனர். ஏற்கனவே டவுன் பஸ்களை இயக்கி வந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் புறநகர் பஸ்களை இயக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். இதனால் பஸ்கள் நேற்று கூடுதலாக இயக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 303 அரசு பஸ்கள் உள்ளன. இதில் நேற்று 119 அரசு பஸ்கள் இயங்கின. இது 39 சதவீதம் ஆகும்.
ஆர்ப்பாட்டம்
மேலும் கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கருப்பசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story