டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 1:01 AM IST (Updated: 27 Feb 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்:

போராட்டம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் இருந்து இலந்தைகூடம் கிராமத்திற்கு செல்லும் சாலை இடையே கடந்த சில வருடங்களாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த டாஸ்மாக் கடை இலந்தைகூடம் கிராமத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு பாதி சாலையை மட்டும் மறித்து அமர்ந்து கொண்டு, டாஸ்மாக் கடை எங்கள் கிராமத்திற்கு வேண்டாம், அதனை உடனடியாக மூட வேண்டும், என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு இடையூறு
இது குறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்க கோவில் எசனை, விளாகம் என இரண்டு கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். அவர்கள் வரும் சாலையில் இந்த டாஸ்மாக் கடை இயங்கி வருவதால், அவர்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இந்த கடை தொடர்ந்து இயங்கி வந்தால் எங்கள் கிராமத்தின் பல ஆண்கள் மதுவுக்கு அடிமையாக நேரிடும். எனவே அந்த கடையை உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கனூர் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களின் கோரிக்கை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள், என்று தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story