காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம்


காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 8:39 PM GMT (Updated: 26 Feb 2021 8:41 PM GMT)

காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

காரமடை,

கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசிமக திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து தினந்தோறும் இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 24-ந் தேதி இரவு கருட வாகன சேவை நடைபெற்றது.

தொடர்ந்து இன்று  திருக்கல்யாண உற்சவம் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி பெட்டதம்மன் மலை குகையில் இருந்து அம்மன் அரங்கநாயகி தாயார் அழைத்துவரப்பட்டார். கோவிலில் அரங்கநாயகி தாயார் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்க பெருமாள் வீற்றிருந்தார்.

 தொடர்ந்து அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக மஞ்சள் இடித்தல், கங்கணம் கட்டுதல், பூணூல் அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவம் நடைபெற்றது. விழாவில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்  நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு அரங்கநாதபெருமாள் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார்.  தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். 

கடந்த ஆண்டு நடந்த தேரோட்டத்தின்போது சிலர் சமுக விரோத செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தேரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தேரோட்டத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-காரமடை இடையே 20 சிறப்பு பஸ்களும், அன்னூர்-காரமடை இடையே 10 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.  மேலும் கோவை-காரமடை இடையே 20 சிறப்பு பஸ்களும், சத்தியமங்கலம், நம்பியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 சிறப்பு பஸ்களும்  இயக்கப்பட உள்ளன. 

Next Story