தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 26 Feb 2021 9:22 PM GMT (Updated: 26 Feb 2021 9:22 PM GMT)

தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.

நெல்லை:

தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.

நெல்லையில் முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி பிரசாரம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே தமிழகத்தில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அடுத்தகட்டமாக ராகுல்காந்தி தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மதுரை பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக வந்த ராகுல்காந்திக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் கலாசாரத்தையும், வீரத்தையும் ராகுல்காந்தி மதிக்கிறார். அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் அல்ல. தமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் மக்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊழல் புகார்களை மறைக்க...

கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க.-காங்கிரஸ் பற்றியும், அதன் தலைவர்களை பற்றியும் அநாகரிமாக விமர்சித்தது கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு தரக்குறைவாக உள்ளது. இது 
பிரதமருக்கு அழகல்ல.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மறைப்பதற்காக பிரதமர் இவ்வாறு பேசி உள்ளார். பா.ஜனதாவினர் தங்களது கூட்டத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர். படத்தை வைத்து கட்சியை வளர்க்க நினைக்கின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தலாம். காமராஜருக்கும், 

பா.ஜனதாவுக்கும் என்ன சம்பந்தம்?.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி வருகிற சட்டசபை தேர்தலில் எத்தனை அணிகள் வந்தாலும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை மக்கள் புறக்கணிப்பர்

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுச்சேரியில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள் ஊழலில் ஊறிக் கிடக்கின்றனர். அவர்கள் மீதான ஊழல் புகார் குறித்து கவர்னரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. பா.ஜனதாவுக்கு அடிபணிந்து செயல்படும் அ.தி.மு.க.வை வருகிற தேர்தலில் மக்கள் புறக்கணிப்பர்.

சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது. ஆனால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவற்றுக்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்பாடுகளை காங்கிரசார் ஆய்வு

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பேராசிரியர்கள்,  மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

Next Story