நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்


நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 27 Feb 2021 4:47 AM IST (Updated: 27 Feb 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

2-வது நாளாக வேலைநிறுத்தம்

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நெல்லை மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் நெல்லை மண்டலத்தில் பெரும்பாலான அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் அதிகாலை 4 மணிக்கு பதிலாக, 5.30 மணியில் இருந்தே பஸ்கள் இயக்கப்பட்டன.

மாணவர்கள் அவதி

கிராமப்புறங்களை தவிர்த்து முக்கிய வழித்தடங்களில் மட்டுமே பெரும்பாலும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்து இருந்தனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவும் சிரமப்பட்டனர்.

பல்வேறு கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் அவற்றில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதற்கிைடயே போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விரைவு போக்குவரத்து கழக மாநில துணை செயலாளர் அருண் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் மோகன், வெங்கடாசலம், ஜோதி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

கூடுதல் பஸ்கள் 

தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, நெல்லை மண்டலத்தில் 50 சதவீத பஸ்களே இயக்கப்படுகிறது. தற்காலிக டிரைவர்களை நியமித்து கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
அதன்படி நெல்லை ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்களை வரவழைத்து கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறோம். வேலைநிறுத்த போராட்டம் நீடித்தால் கூடுதலாக தற்காலிக டிரைவர்களை நியமித்து பஸ்களை இயக்குவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் ேபாக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Next Story