உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரம் எடுத்துச்சென்றால் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரம் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் என நாகை கலெக்டர் பிரவீன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரம் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் என நாகை கலெக்டர் பிரவீன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்காணிப்புக்குழு வாகனங்கள்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு வாகனங்களை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா, கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, தேர்தல் பிரிவு தாசில்தார் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தல் அட்டவணைகளை தேர்தல் ஆணையத்தால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் உள்ள (மயிலாடுதுறை மாவட்டம் உள்பட) சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் தொடங்கி விட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது.
18 பறக்கும்படைகள்
நடத்தை விதிகளை பொறுத்தவரை 2 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சாலையோரம், கட்டிடங்கள், பொது இடங்கள், பாலங்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சி தொடர்பான சுவரொட்டிகளை அழிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து அழிக்கவில்லை என்றால் பணியாளர்கள் மூலமாக அழிக்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கப்பட்டுள்ளது. நகராட்சி, ஊராட்சி பேரூராட்சி அலுவலர்கள் மூலம் இப்பணிகள் நடந்து வருகிறது.
அரசியல் பிரமுகர்களின் உருவசிலைகள் மறைப்பது, அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் கம்பங்கள் வருகிற 1-ந் தேதிக்குள் அகற்றப்படும். நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை என 6 தொகுதிகளுக்கும் 18 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அது தவிர நிலையான கண்காணிப்பு குழு ஒரு தொகுதிக்கு 3 படைகள் வீதம் 6 தொகுகளுக்கும் 18 நிலையான கண்காணிப்புகுழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.வீடியோ கண்காணிப்புகுழு ஒரு தொகுதிக்கு 2 என்ற வீதத்தில் 6 தொகுதிகளுக்கும் 12 குழுக்களும் என மொத்தம் 48 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டு மதியம் முதல் கண்காணிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுக்களை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு வாகனத்திலும் ஜி.பி.எஸ்.கருவி பொறுத்தப்பட்டுள்ளது.
1,861 வாக்குச்சாவடி
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஏற்கனவே 1,511 வாக்குச்சாவடிகள் இருந்தது. கொரோனா தொற்று காரணமாக ஆயிரத்து 50-க்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அருகிலேயே கூடுதல் வாக்குச்சாவடி மையம் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி கூடுதலாக 350 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்பொழுது 1861 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 91 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து முன் களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக எடுத்து செல்ல கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் உரிய ஆவணத்துடன் எடுத்து செல்ல வேண்டும். உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமாக எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும்.விளம்பரங்கள், வாட்ஸ்அப் மற்றும் அனைத்து தொலைக்காட்சிகளில் அனுமதி இன்றி வரும் விளம்பரங்கள் ஊடக சான்றிதழ் மற்றும் காண்காணிப்பு குழுவால் கண்காணிக்கப்பட்டு தேர்தல் செலவினங்களில் சேர்க்கப்படும்.
புகார் தெரிவிக்கலாம்
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். இதற்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 1050 என்ற எண்ணிலும், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 1950 என்ற இலவச எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story