மாநில கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டம்; பிரகாஷ் காரத் பேச்சு


மாநில கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டம்; பிரகாஷ் காரத் பேச்சு
x
தினத்தந்தி 27 Feb 2021 5:55 PM GMT (Updated: 27 Feb 2021 5:55 PM GMT)

மாநில கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடிக்கும் திட்டத்தை பா.ஜனதா கையாண்டு வருகிறது என்று திண்டுக்கல்லில் நடந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் பேசினார்.

திண்டுக்கல்:
மாநில கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடிக்கும் திட்டத்தை பா.ஜனதா கையாண்டு வருகிறது என்று திண்டுக்கல்லில் நடந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் பேசினார்.
தேர்தல் நிதியளிப்பு மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் நிதியளிப்பு மற்றும் பிரசார தொடக்க மாநாடு, திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்காரத்திடம் ரூ.10 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. இதையடுத்து பிரகாஷ்காரத் பேசியதாவது:-
நாடு முழுவதும் ஒரு கட்சியின் ஆட்சி என்ற கொள்கையை பா.ஜனதா செயல்படுத்துகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் எதிர்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பா.ஜனதா அரசு தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.
தனியாருக்கு சுயசார்பு 
அதை எதிர்த்து டெல்லியில் 3 மாதங்களாக விவசாயிகள் பனியிலும் போராடி வருகின்றனர். 250 பேர் தங்களுடைய உயிரை மாய்த்துள்ளனர். ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தொழிலாளர் சட்ட தொகுப்புகளை உருவாக்கி இருக்கிறது.
எனவே, பா.ஜனதா அரசின் சுயசார்பு என்பது பன்னாட்டு, தனியார் நிறுவனங்களுக்கான சுயசார்பாக உள்ளது. ஆனால், அ.தி.மு.க. அரசு எதிர்த்து பேசாமல், பா.ஜனதாவின் செயல்பாடுகளை ஆமோதித்து செயல்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே, மக்கள் விரோதபோக்கை கண்டித்து போராடி வருகிறது.
அருங்காட்சியகம்
பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். ஆணும், பெண்ணும் காதலிக்க மதம் ஒரு தடை இல்லை என்று நீதிமன்றம் கூறியும் உத்தரபிரதேச அரசு கண்டுகொள்ளவில்லை. பல மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் மூலம் அடக்குமுறை நடக்கிறது. கால்நடைகளை விற்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பா.ஜனதா புதிய இந்தியா என்ற கோஷத்தை முன்வைக்கிறது. ஆனால், ராமர்கோவில் கட்டுவதும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதுமே புதிய இந்தியா நடவடிக்கையாக இருக்கிறது. தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற இருக்கிறார்கள். இதனால் நாட்டின் ஜனநாயகம் அருங்காட்சியமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
வளைக்கும் பா.ஜனதா
பா.ஜனதா அரசு மாநில கட்சிகளை வளைத்து போட்டு ஆட்சியை பிடிக்கும் திட்டத்தில் ஈடுபடுகிறது. அதை பல மாநிலங்களில் செயல்படுத்தி இருக்கிறது. அசாமில் ஒரு கட்சியை இல்லாமல் செய்து விட்டது. தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. பின்னால் நின்று கொண்டு பா.ஜனதா தேர்தலை சந்திக்கிறது. அதற்காக அ.தி.மு.க.வை பின்னால் இருந்து பா.ஜனதா இயக்குகிறது.
பா.ஜனதா விரித்த வலையில் அ.தி.மு.க. இரையாக போகிறது. தமிழகத்தில் புதிய மாற்றத்தை தரும் அரசு அமைய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும். இதற்காக தி.மு.க.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்ற கூட்டணி வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தலை மனதில் வைத்து... 
இதைத்தொடர்ந்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் பெண் போலீஸ் அதிகாரிக்கு கூட பாதுகாப்பு இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஆனால், வெற்றிநடை போடும் தமிழகம் என்று விளம்பரம் செய்கிறார்கள். வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு என்பதை வரவேற்கிறோம். அதை 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்து இருக்கலாம்.
சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக கடைசிநேரத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தேர்தலை மனதில் வைத்தே விவசாய கடன், சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன் ஆகியவற்றை அ.தி.மு.க. அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை.
பிரதமர் நரேந்திரமோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். திருக்குறள், ஆத்திச்சூடி, அகநானூறு, புறநானூறு என அனைத்தையும் கூறுகிறார். உழவரின் பெருமை பேசும் திருக்குறளை கூறும் பிரதமர், டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. எத்தனை திருக்குறள் பேசினாலும், தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது, என்றார்.
இந்த மாநாட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் காமராஜ், பாண்டி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன், ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ், நகர செயலாளர் ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story