திண்டுக்கல் அருகே தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தையை எரித்துக்கொல்ல முயற்சி


திண்டுக்கல் அருகே தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தையை எரித்துக்கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 27 Feb 2021 6:15 PM GMT (Updated: 27 Feb 2021 6:15 PM GMT)

தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தையை எரித்துக்கொல்ல முயன்ற உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குள்ளனம்பட்டி:
தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 7 மாத குழந்தையை எரித்துக்கொல்ல முயன்ற உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்விரோதம்
திண்டுக்கல் அருகே உள்ள உத்தனம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 22). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு தர்சிகாஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. 
இவர்களின் உறவினர், தாடிக்கொம்பு அருகே உள்ள பண்ணைப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில்குமார் (44). கதிர்வேல் குடும்பத்தினருக்கும், செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
எரித்துக்கொல்ல முயற்சி
இந்த நிலையில் நேற்று முன்தினம் கதிர்வேல் வீட்டுக்கு செந்தில்குமார் வந்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தர்சிகாஸ்ரீயை தூக்கிக்கொண்டு வீட்டருகே உள்ள குளக்கரை பகுதிக்கு சென்றார்.
 பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து, அதில் இருந்த பெட்ரோலை தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மீது ஊற்றினார். இதனால் தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்த குழந்தை தர்சிகாஸ்ரீ அழத்தொடங்கினாள்.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த சுகன்யா, செந்தில்குமார் குழந்தை மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக்கொல்ல முயல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ஓடிச்சென்று அவரை தடுக்க முயன்றார்.
கைது
அப்போது, அவர் மீதும் பெட்ரோலை ஊற்றிய செந்தில்குமார், தாய், குழந்தை இருவரையும் தீ வைத்து கொல்ல முயன்றார். இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும், செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 
பின்னர் சுகன்யாவும், தர்சிகாஸ்ரீயும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். முன்விரோதத்தில் பச்சிளம் குழந்தையை உறவினரே எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை பதற வைத்தது.

Next Story