தேர்தல் அலுவலர் அனுமதி பெற்ற பின்னரே மண்டபங்களை வாடகைக்கு விட வேண்டும்


தேர்தல் அலுவலர் அனுமதி பெற்ற பின்னரே மண்டபங்களை வாடகைக்கு விட வேண்டும்
x
தினத்தந்தி 27 Feb 2021 6:55 PM GMT (Updated: 27 Feb 2021 6:55 PM GMT)

திருமண மண்டபங்களை அரசியல் கட்சியினருக்கு தேர்தல் அலுவலர் அனுமதி பெற்ற பின்பே வாடகைக்கு விட வேண்டும் என உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர்

திருமண மண்டபங்களை அரசியல் கட்சியினருக்கு தேர்தல் அலுவலர் அனுமதி பெற்ற பின்பே வாடகைக்கு விட வேண்டும் என உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் சிவன் அருள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருமண மண்டபங்கள்

அதைத்தொடர்ந்து கலெக்டர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களும் திருமண மண்டபங்களை திருமணம் மற்றும் இதர அரசியல் அல்லாத விழாக்களுக்கு மட்டும் வாடகைக்கு அனுமதிக்கலாம்.

திருமண மண்டபங்களை தனி நபர்களுக்கோ, அன்னதானம் வழங்கவோ, பொதுக்கூட்டங்கள் நடத்திட எக்காரணம் கொண்டும் வாடகைக்கு அனுமதிக்க கூடாது. திருமண மண்டபங்களை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி ஆணை பெற்ற பின்னரே வாடகைக்கு வழங்க வேண்டும்.

அனுமதி பெறவேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளின்படி நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் பொது இடங்களில், தனியார் இடங்களில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டவோ, சுவர் விளம்பரம் எழுதவோ அனுமதி கிடையாது. கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட உரிமையாளரின் அனுமதி பெறவேண்டும். 
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவிலான வாகனங்களை பயன்படுத்த அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்று பின்னரே வாகனங்களை உபயோகிக்க முடியும்.

துப்பாக்கி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்,

Next Story