தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் கரூர் பகுதியில் விளம்பர பதாகைகள் அகற்றம்


தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் கரூர் பகுதியில் விளம்பர பதாகைகள் அகற்றம்
x
தினத்தந்தி 27 Feb 2021 7:11 PM GMT (Updated: 27 Feb 2021 7:11 PM GMT)

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால், கரூர் பகுதியில் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.

கரூர்
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் தேதி நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினரின் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 
அதன்படி கரூர் நகரில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை கட்சியை சேர்ந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து பேனர்களை அகற்றி வருகின்றனர்.
பதாகைகள் அகற்றம்
கலெக்டர் அலுவலகம் ரோடு, தாந்தோன்றிமலை, சுங்ககேட், பசுபதிபாளையம், கரூர் பஸ்நிலையம், மனோகரா கார்னர் ரவுண்டானா, கரூர்-கோவை ரோடு உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவர்ரொட்டிகளை நகராட்சி ஊழியர்கள் கிழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் சுண்ணாம்பு கொண்டு அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதேபோல் கலெக்டர் அலுவலகம் எதிரே வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பர பதாகைகளையும், சுங்ககேட், தாந்தோன்றிமலை பகுதியில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளையும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். ஒருசில அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது சுவர் விளம்பரங்களை மறைத்தும் வருகின்றனர்.
தோகைமலை
இதேபோல், தோகைமலை ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் ேதாகைமலை பகுதியில் உள்ள அனைத்து கட்சி விளம்பரங்கள் மற்றும் பதாகைகளையும் 24 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு சிலர் பதாகைகளை தானாக முன்வந்து அகற்றி விட்டனர். ஒரு சிலரது சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்களை ஒன்றிய பணியாளர்கள், ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

Next Story