தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்


தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Feb 2021 7:21 PM GMT (Updated: 27 Feb 2021 7:21 PM GMT)

மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கண்ணன் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர்,
மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கண்ணன் கேட்டுக் கொண்டார்.
 ஆலோசனை கூட்டம் 
சட்டமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் நேற்று கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல்அதிகாரியான கலெக்டர் கண்ணன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
 பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆகியவையும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி 
 மாவட்டத்தில் 1,881 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் தற்போது 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க அறிவுறுத்தியுள்ளது.
 மேலும் கூடுதலாக 489 வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,370 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
கண்காணிப்பு
 மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீதம் மையங்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக பணியில் ஈடுபட்டு அந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பெறுவார்கள். கடந்த தேர்தலின் போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
பிரசார கூட்டம் 
 இந்தநிலையில் தற்போது 7 சட்டமன்ற தொகுதியிலும் அந்தந்த தொகுதியில் வேட்பு மனுக்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பிரசார கூட்டம் நடத்துவதற்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து வகை குழுக்கள் 
 நேரடியாகவும் விண்ணப்பம் அளித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வேட்பாளர்கள் அரசியல் கட்சியினரின் செலவினங்களை கண்காணிக்க ஐந்து வகை குழுக்கள் அமைக்கப்பட்டு குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு கடமைகள், பொறுப்புகள் குறித்து விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப அவர்கள் செயல்படுவார்கள்.
 இவ்வாறு அவர் கூறினார். 
கலந்து கொண்டவர்கள் 
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், தேர்தல் தாசில்தார் அய்யாக்குட்டி உள்பட அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story