மாசி மகத்தையொட்டி கடலூர் துறைமுகத்தில் தெப்ப உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


மாசி மகத்தையொட்டி  கடலூர் துறைமுகத்தில் தெப்ப உற்சவம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 Feb 2021 8:54 PM GMT (Updated: 27 Feb 2021 8:54 PM GMT)

கடலூர் துறைமுகத்தில் தெப்ப உற்சவம்

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகம் அருகே உள்ள சோனாங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளரி அம்மன், அக்கரைக்கோரி கண்ணனூர் மாரியம்மன், சலங்கார தெரு நாகமுத்தாலம்மன், ஆற்றங்கரைவீதி ஏழை மாரியம்மன் ஆகிய கோவில்களில் மாசி மகவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. 
இந்த நிலையில் மாசி மகத்தையொட்டி நேற்று காலை வெங்கடேச பெருமாள், வெள்ளரி அம்மன், கண்ணனூர் மாரியம்மன், நாகமுத்தாலம்மன், ஏழை மாரியம்மன் ஆகிய சாமிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 

தெப்ப உற்சவம்

அதனைத் தொடர்ந்து இரவு வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 5 சாமிகளும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினர். பின்னர் பல்லக்குகள் பெரிய விசைப்படகுகளில் வைக்கப்பட்டு கடலூர் துறைமுகம் கடலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னர் தனித்தனி விசை படகுகளில் எழுந்தருளிய சாமிகள், மீன்பிடி இறங்கு தளத்துக்கு வந்தன. 
இதையடுத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி மகத்தையொட்டி கடலூர் துறைமுகத்தில் தொடர்ந்து 80 ஆண்டுகளுக்கு மேலாக தெப்ப உற்சவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story