தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் 11 தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல் வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை


தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் 11 தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல் வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

சேலம்:
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 
இதையடுத்து எம்.எல்.ஏ.க்களின் அதிகாரமும் முடிவடைந்தது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் அவரவர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உள்ளன. அந்த அலுவலகங்களில் தான் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களை சந்தித்து மனுக்களை வாங்கி வந்தனர். 
தற்போது தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல்
அதன்படி, சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 11 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். அதேநேரத்தில் அலுவலகங்களில் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் இருந்தால் அவற்றை காலி செய்து அறையை ஒப்படைக்க வேணடும் என்று நேற்று முன்தினம் இரவே மாவட்ட கலெக்டர் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 
அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்கள் உடனடியாக பொருட்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துவிட்டு அலுவலகங்களை காலி செய்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடப்பட்டன.
மேலும், அலுவலகம் முன்பு எழுதப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரும் துணியால் மறைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் அஸ்தம்பட்டியில் உள்ள வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம், சூரமங்கலம் பகுதியில் உள்ள மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவை நேற்று காலையிலேயே பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாகனங்கள் ஒப்படைப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 385 ஊராட்சி மன்ற அலுலகங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் வைக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், 20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆகியோர் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைத்துள்ளனர்.

Next Story