பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு


பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 27 Feb 2021 11:05 PM GMT (Updated: 27 Feb 2021 11:08 PM GMT)

பொள்ளாச்சி அருகே சீனிவாசபுரத்தில் அரசு பஸ் மீது கல்வீசி மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழா நடைபெற்றது. 

இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிக டிரைவர்களை கொண்டு பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. 

இந்த நிலையில் ஆனைமலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று அதிகாலை 2 மணிக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை ஆலாங்கடவை சேர்ந்த தற்காலிக டிரைவர் அருண் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.

கல்வீசியதில் டிரைவர் காயம்

சீனிவாசபுரம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்த போது மர்ம நபர்கள் பஸ்சின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் டிரைவர் அருண் லேசான காயமடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஆனைமலைக்கு தற்காலிக டிரைவர்களை கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சீனிவாசபுரத்தில் பஸ் மீது கல்வீசியது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story