137 சமுதாய மக்களை புறக்கணிக்கும் செயல்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, 137 சமுதாய மக்களை புறக்கணிக்கும் செயல் என்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தி னருக்கான கூட்டமைப்பினர் கூறினார்கள்.
கோவை,
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி, துணை ஒருங்கிணைப்பாளர் வெள்ளிங்கிரி, செயலாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பி.சி.) 26.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (எம்.பி.சி.) 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 19 சதவீதம், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.
இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர் சமூகத்தினர் தான் கல்வி, வேலைவாய்ப்புகளில் அதிக சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு தமிழக அரசு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பாரபட்சமாகும். மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் உள்ள மற்ற 25 சமூகத்தினருக்கு 2.5 சதவீதமும், சீர் மரபினருக்கு 7 சதவீதமும் வழங்கியுள்ளனர்.
இந்த சட்டம் 1985-ல் கொடுக்கப்பட்ட அம்பாசங்கர் ஆணைய அறிக்கை யின் பேரில் இயற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1985-ல் கொடுக்கப் பட்ட அம்பாசங்கர் ஆணைய அறிக்கையை அந்த ஆணையத்தின் உறுப்பினர்களே ஏற்றுக் கொள்ளவில்லை.
1989-ம் ஆண்டு முதல் 20 சதவீத இடஒதுக்கீட்டை அனுபவித்து வந்த அதே சமுதாயத்தினருக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய நிலையில் அவர்களின் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து ஆகிய புள்ளி விவரங்களை சேகரிக்காமல் மீண்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திருப்பது பிற்படுத்தப்பட்ட 137 சமுதாய மக்களையும் புறக்கணிக்கும் செயலாகும்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் ஆதங்கம் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு குறிப் பிட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால் அவர்களின் நிலை பற்றி 10 ஆண்டுகளுக்குள் ஆய்வு செய்து அதன்பின்னர் தான் அந்த சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால் 32 ஆண்டுகளாக குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பதவி உயர்வு போன்றவற்றில் சலுகைகளை இழந்து வருகிறார்கள்.
பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) பிரிவில் உள்ள கொங்கு வேளாளர், நாடார், தேவர், முதலியார், யாதவர், செட்டியார் உள்பட 137 சமூகத்தி னருக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு குலசேகரன் தலைமையில் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த கமிஷன் அறிக்கை வருவதற்கு முன்பு அவசரம் அவசரமாக வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது ஏன்?. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து அது ஏற்கப்பட்டு அரசுக்கும், அரசு வக்கீல்களுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை சேர்ந்த இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவது குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
இதற்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொண்டாமுத்தூரில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
முன்னதாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story