கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் தாக்கப்பட்ட வாலிபர் சாவு அன்னவாசலில் போலீசார் குவிப்பு


கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல்  தாக்கப்பட்ட வாலிபர் சாவு   அன்னவாசலில் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 5:05 PM GMT (Updated: 28 Feb 2021 5:05 PM GMT)

கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார். அன்னவாசலில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னவாசல்:
மோதல்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வேளார்தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகள் மாரியம்மாள் (வயது 22). இவர் கடந்த 25-ந்தேதி அன்னவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில் திருவிழாவில் ஒரு கடையில் நின்ற போது, அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்த பாலமுருகன், விஜய், மனோஜ்குமார் மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் பிரச்சினை செய்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 
அப்போது அங்கு வந்த மாரியம்மாளின் தம்பி ஆறுமுகம் (20) எதற்காக தனியாக வந்த பெண்ணிடம் பிரச்சினை செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து மாரியம்மாள், ஆறுமுகத்தை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
6 பேர் கைது 
அதன்பின்னர் பாலமுருகன் உள்ளிட்ட சிலர் அவர்களை பின்தொடர்ந்து அவர்களது வீட்டிற்கு செல்லும் வழியில் மறித்து ஆறுமுகத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து மயங்கினார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் 7 பேர் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் (24), விஜய் (22), மனோஜ்குமார் (19) மற்றும் 3 சிறுவர்கள் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபர் சாவு 
இந்நிலையில், பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அன்னவாசல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.   ஆறுமுகத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் வட்டங்கச்சேரி என்னும் இடத்தில் ஒன்றுகூடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இன்னும் பலரை கைது செய்ய வேண்டும்.
அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். எங்கள் பகுதிகளில் வாழும் பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு உள்ளிட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story