ஆடு மேய்த்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து தாலிக்கயிறு பறிப்பு


ஆடு மேய்த்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து தாலிக்கயிறு பறிப்பு
x
தினத்தந்தி 9 March 2021 7:36 PM GMT (Updated: 9 March 2021 7:36 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து தாலிக்கயிறை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:

தாலிக்கயிறு பறிப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி விஜயகுமாரி(வயது 52). இவர் நேற்று மதியம் வாரியங்காவல்- தேவனூர் செல்லும் சாலையில் உள்ள அவருக்கு சொந்த முந்திரிக்கொல்லையில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், தண்ணீர் கேட்பது போல் நடித்து, விஜயகுமாரியின் கழுத்தில் கிடந்த தாலிக்கயிற்றை அறுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். அப்போது விஜயகுமாரி மர்ம நபருடன் போராடியும் அவரை பிடிக்க முடியவில்லை. மேலும் கீழே விழுந்ததில் விஜயகுமாரிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மர்ம நபர் பறித்து சென்ற கயிற்றில் தாலி, குண்டு, காசு உள்பட 1½ பவுன் இருந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) குணசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, விஜயகுமாரி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணிடம் தாலிக் கயிறு பறிக்கப்பட்ட சம்பவம் வாரியங்காவல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story