நாளை மறுநாள் முதல் பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம்


நாளை மறுநாள் முதல் பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம்
x
தினத்தந்தி 9 March 2021 7:36 PM GMT (Updated: 9 March 2021 7:36 PM GMT)

நாளை மறுநாள் முதல் பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்:

வேட்புமனு தாக்கல்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னும், பின்னும் வேட்புமனுக்கள் பெறப்படாது. வருகிற 13, 14-ந் தேதி ஆகிய 2 நாட்களும் விடுமுறை ஆகும். வேட்புமனு விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இலவசமாக பெற்று முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து வேட்புமனுவை அளிக்க வேண்டும். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான பத்மஜாவிடம் (9445000458) அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் சின்னதுரையிடம் (9445000610) வேட்புமனு தாக்கல் செய்யலாம். குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சங்கரிடம் (94450 00270) அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான கிருஷ்ணராஜீவிடம் (94450 00612) சமர்ப்பிக்கலாம்.
வேட்பாளருடன் 2 பேருக்கு அனுமதி
வேட்புமனுவை வேட்பாளர் அல்லது அவரை முன் மொழிபவர்கள் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு பெறப்படும் அலுவலகத்தில் 100 மீட்டர் சுற்றளவுக்கு அதிகபட்சமாக 2 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் ஒருவா் முன்மொழிந்தால் போதுமானது. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளராக இருந்தால் 10 பேர் முன்மொழிய வேண்டும். அவ்வாறு முன்மொழிபவர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
தேர்தலில் போட்டியிடும் பழங்குடியினர் மக்கள் பிரிவினை சேர்ந்தவர்கள் (சாதிச்சான்றிதழுடன்) ரூ.5 ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டும். வைப்புத்தொகைக்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், படிவம் 26-ல் அனைத்து பகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். பத்திரத்தில் கைப்பட எழுதி அல்லது தட்டச்சு செய்து பயன்படுத்தலாம். வேட்பாளர் அனைத்து பக்கங்களிலும் கையொப்பமிட்டிருக்க வேண்டும். பத்திரத்தில் ரூ.20 முத்திரைத்தாள் அளிக்க வேண்டும். வேட்பாளர் பிற சட்டமன்ற தொகுதி வாக்காளராக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் (இ.ஆர்.ஓ.) சான்று பெற்றிருக்க வேண்டும்.
வங்கி கணக்கு
வேட்புமனுவுடன் அதிகபட்சமாக 3 மாதத்திற்குள் எடுக்கப்பட்ட 3 ஸ்டாம்ப் அளவு புகைப்படமும், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் இணைக்க வேண்டும். வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதனை வேட்பாளரே எழுதி தர வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் வேட்புமனு தாக்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பாக தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள ஏதுவாக தனியாக ஒரு வங்கி கணக்கினை தொடங்கியிருக்க வேண்டும். வேட்புமனுக்கள் தாக்கலின் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்படும்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Next Story