உரிய வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்


உரிய வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 28 March 2021 8:05 PM GMT (Updated: 28 March 2021 8:05 PM GMT)

மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் நடைமுறை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 
மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் நடைமுறை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 தடுப்பூசி 
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசி போடும் நடைமுறை கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது.
 முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இம்மாதம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ரத்த அழுத்தம் 
 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட வருபவரிடம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தடுப்பூசி போட வருபவர்களிடம் சாப்பிட்டு வந்துள்ளனரா என்பதையும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்பு உள்ளதா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்ப்பு சக்தி 
 தடுப்பூசி போட்ட பின்னர் காய்ச்சல், உடல் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 எனவே அதுபற்றி தடுப்பூசி போட்டவர்களிடம் தெரிவித்து அதற்கான மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி மருத்துவ நிபுணரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தடுப்பூசி என்பது கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு உள்ளதாகும். முதல் தவணை தடுப்பூசி போட்ட மூன்று வாரத்தில் எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கும்.
காய்ச்சல் 
2-வது தவணை தடுப்பூசி போட்ட மூன்று வாரத்திற்கு பின் முழுமையான எதிர்ப்பு சக்தி உருவாகி விடும். ஏற்கனவே 28 நாட்களுக்கு பின் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தபட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4 வாரம் முதல் 6 வாரத்திற்குள் 2-வது தவணை தடுப்பூசி என தெரிவித்துள்ளது.
 தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது. தடுப்பு ஊசி போட்டதால் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்றவை ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகி விடும். 
மத்திய அரசு அறிவுறுத்தல் படி 4 மணி நேரத்திற்கு மேலாகி விட்டால் மருந்தை பயன்படுத்தக்கூடாது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மத்திய அரசு வழிகாட்டுதலின் பேரில் தடுப்பூசி போடுவது முக்கியமானதாகும். 
வலியுறுத்தல்
 மாவட்டத்தில் தற்போது உள்ள நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது தடுப்பூசி போடுவதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story