பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 28 March 2021 8:46 PM GMT (Updated: 28 March 2021 8:46 PM GMT)

பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை
பங்குனி உத்திர நாளில் குல தெய்வ வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும். இதேபோல முருக கடவுளுக்கு உகந்த நாளாகும். இதனால் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காலக்கட்டத்தினால் ஊரடங்கின் காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பங்குனி உத்திர விழா நேற்று கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டையில் நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி, நைனராஜு தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆங்காங்கே அன்னதானமும் நடைபெற்றது. இதேபோல விராலிமலையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் நேற்று முருகனுக்கு வெள்ளிகவசம் சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகனுக்கு முடி காணிக்கை செலுத்தினர். குமரமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story