போலீஸ் நிலையங்களுக்கு பணம் பட்டுவாடா: தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வேட்பாளருடன் வந்து அ.தி.மு.க.வினர் கோஷம்


போலீஸ் நிலையங்களுக்கு பணம் பட்டுவாடா: தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வேட்பாளருடன் வந்து அ.தி.மு.க.வினர் கோஷம்
x
தினத்தந்தி 28 March 2021 8:59 PM GMT (Updated: 28 March 2021 8:59 PM GMT)

போலீஸ் நிலையங்களுக்கு பணம் பட்டுவாடா செய்த தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அ.தி.மு.க.வினர் வேட்பாளருடன் வந்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருச்சி, 
போலீஸ் நிலையங்களுக்கு பணம் பட்டுவாடா செய்த தி.மு.க. வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அ.தி.மு.க.வினர் வேட்பாளருடன் வந்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பணம் பட்டுவாடா

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.பத்மநாதனும், தி.மு.க. வேட்பாளராக தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே. என். நேருவும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர், தில்லை நகர் போலீஸ் நிலையங்களில் போலீசார் தபால் ஓட்டு போடுவதற்காக கவர்களில் வழங்கப்பட்ட பணம் ரூ.1 லட்சத்துக்கு மேல் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்யப்பட்டது.

6 பேர் பணியிடை நீக்கம்

இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் விசாரணை நடத்தி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 8 போலீசார் வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

போலீஸ் நிலையத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மேற்கு தொகுதியில் தேர்தலில் நிறுத்துவதற்காக சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என தி.மு.க. வேட்பாளர் நேரு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தும் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு மனு அனுப்பினார்.

வேட்பாளருடன் வந்து கோஷம்

இந்த நிலையில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பத்மநாதன் நேற்று மதியம் திடீரென திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜ்குமார், வர்த்தக அணி செயலாளர் ஜோசப் ஜெரால்டு, பகுதி செயலாளர் பூபதி உள்பட நிர்வாகிகள் வந்திருந்தனர். 
அவர்கள் திருச்சி மேற்கு தொகுதியில் போலீஸ் நிலையங்களுக்கு சட்ட விரோதமாக பணம் பட்டுவாடா செய்த தி.மு.க. வேட்பாளர் நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்பது உள்பட கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமாரிடம் மனு கொடுத்து விட்டுச் சென்றனர்.

Next Story