தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவபடையினர் 1000 பேர் வருகை


தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவபடையினர் 1000 பேர் வருகை
x
தினத்தந்தி 29 March 2021 2:39 AM IST (Updated: 29 March 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவபடையை சேர்ந்த 1000 பேர் வந்தனர். இவர்கள் திருச்சியில் இருந்து 50 வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.

தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவபடையை சேர்ந்த 1000 பேர் வந்தனர். இவர்கள் திருச்சியில் இருந்து 50 வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக தற்போது வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த 8 தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 866 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான எந்திரங்கள், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
துணை ராணுவத்தினர் வந்தனர்
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 2 பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ படையினர் தஞ்சை வந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே கொடி அணி வகுப்பில் ஈடுபட்டதுடன், தற்போது பறக்கும்படையினருடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவ படையை சேர்ந்த 1,000 பேர் நேற்று தஞ்சை வந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் நேற்று மாலை அவர்கள் திருச்சி வந்தனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டனர்.
50 வாகனங்கள்
இதற்காக நேற்று காலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து 20 வேன்கள், 12 கார்கள், உடைமைகளை எடுத்து வருவதற்காக 18 லாரிகள் என மொத்தம் 50 வாகனங்கள் தஞ்சையில் இருந்து திருச்சி சென்று அவர்களை அழைத்து வந்தனர். மொத்தம் 10 பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ படையினர் 8 தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டனர்.
முன்னதாக தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து இவர்களை அழைத்து வருவதற்காக சென்ற வாகனங்களை வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அமலதாஸ், சந்திரமோகன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story