சென்னிமலை, கோபி, கொடுமுடி, புஞ்சைபுளியம்பட்டி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சென்னிமலை, கோபி, கொடுமுடி, புஞ்சைபுளியம்பட்டி முருகன் கோவில்களில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு
சென்னிமலை, கோபி, கொடுமுடி, புஞ்சைபுளியம்பட்டி முருகன் கோவில்களில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகன் கோவில்
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அப்போது தேரோட்டமும் நடக்கும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பங்குனி உத்திர தேரோட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டும் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டாலும் மற்ற நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
கொடியேற்றத்துடன் தொடங்கியது
இதைத்தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கைலாசநாதர் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ராஜ வீதிகள்
இதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணி அளவில் சாமி சிறிய தேரான சகடை தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, “கந்தனுக்கு அரோகா, முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி கோஷத்துடன் சகடை தேரை ஏராளமான பக்தர்கள் இழுத்து சென்றனர்.
அங்கிருந்து பக்தர்கள் வெள்ளத்தில் 4 ராஜ வீதிகள் வழியாக சகடை தேர் வலம் வந்து மீண்டும் கைலாசநாதர் கோவிலை 6 மணி அளவில் சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
போக்குவரத்து நெரிசல்
மேலும் பங்குனி உத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்ததால் வாகனம் நிறுத்தும் இடங்களில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டது.
இதனால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் 8-வது வளைவிலேயே கார்கள் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன. இதன்காரணமாக பக்தர்கள் அங்கிருந்து கோவிலுக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் வளாகத்தில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய அடிவாரத்திலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மலைக்கோவிலில் இருந்து 10 கார்கள் கீழே வந்த பிறகு அடிவாரத்தில் இருந்து 10 கார்கள் வீதம் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டது. சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், கோவில் பணியாளர்களுடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) பரிவேட்டை மற்றும் தெப்பத்தேர் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மகா தரிசனம் மற்றும் இரவு மஞ்சள் நீர் உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது
சுப்பிரமணியசாமி கோவில்
சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் ஏமூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பக்தர்கள் கொடுமுடி, மடவிளாகம் ஆகிய இடங்களுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் அன்று இரவு ஏமூர் சுப்பிரமணியசாமிக்கு பல்வேறு வகையான திரவியங்களுடன் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் சென்னிமலை அருகே மேற்கு புதுப்பாளையம் பகுதியில் உள்ள பழனியாண்டவர் கோவிலிலும் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கொடுமுடி
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் முருக பக்தர்கள் காவடி, தீர்த்தம் எடுத்து பழனி முருகன் கோவிலுக்கு யாத்திரையாக செல்வது வழக்கம். இதனால் பங்குனி மாத தொடக்கத்தில் இருந்தே காவடிகள் எடுக்க கொடுமுடிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். ஆனால் காெரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு பக்தர்கள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.
எனினும் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு பஸ், வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் திரளான பக்தர்கள் வந்து குவிந்தனர். இதனால் கொடுமுடி நகரம் முழுவதும் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் காவடி எடுத்து பக்தர்கள் யாத்திரை செல்வதையும் காணமுடிந்தது. இதையொட்டி பக்தர்கள் அனைவரும் காவிரி ஆற்றில் போடப்பட்டிருந்த பந்தல்களில் தங்கி இருந்து புனித நீராடி தீர்த்தம் எடுத்து மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், பிரம்மா, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமியை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் பலர் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
கோபி
கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி பங்குனி உத்திர தேர் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு பூஜை மற்றும் சாமி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் சண்முகருக்கு சிவப்பு சாத்தி அலங்காரம் செய்யப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்னர் மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது மலையை சுற்றி வந்து நிலை சேர்ந்தது. இதையொட்டி நேற்று காலை முதல் மாலை வரை முருகனுக்கு பச்சைபட்டு, பச்சைமாலை அலங்காரம் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அன்னதானம், அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல் பவளமலை முத்துக்குமாரசுவாமி கோவில், காசிபாளையம் மூன்று முகம் முத்து வேலாயுத சுவாமி கோவில் மற்றும் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி சுப்பிரமணியர் கோவில், கொன்டையம்பாளையம் பொன்மலை ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழாவைெயாட்டி சாமிக்கு சிறப்பு அலங்கார பூைஜகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story