எடப்பாடி அருகே வைத்தீஸ்வரன் கோவில் திருவிழா
வைத்தீஸ்வரன் கோவில் திருவிழா
எடப்பாடி:
எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தை அடுத்த மடத்தூரில் வைத்தீஸ்வரன், தையல்நாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று வைத்தீஸ்வரன், தையல்நாயகி மற்றும் வள்ளி, தெய்வானை, முருகன், விநாயகர் சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் ஏற்றப்பட்டு, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் கவுண்டர்கள், காணியாகிக்காரர்கள் மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி ஆகியோர் முன்னிலையில் சப்பரத்தில் சாமி சிலைகள் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக தூக்கி வரப்பட்டது. அப்போது பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story