பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.81 ஆயிரத்து 400 பறிமுதல்


பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.81 ஆயிரத்து 400 பறிமுதல்
x
தினத்தந்தி 28 March 2021 11:01 PM GMT (Updated: 28 March 2021 11:01 PM GMT)

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.81 ஆயிரத்து 400-ஐ உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.81 ஆயிரத்து 400ஐ உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்படும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாவிபாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையில் போலீசார் முகமது ரிஸ்வான், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஆதிகும்பேஷ்வரர் (வயது 28) என்பவர் இருந்தார். அந்த காரை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்தனர்.
ரூ.81 ஆயிரத்து 400 பறிமுதல்
அப்போது அதில் ரூ.81 ஆயிரத்து 400 இருந்தது. இதற்கான ஆவணத்தை அதிகாரிகள் கேட்டனர். ஆதிகும்பேஷ்வரரிடம் இதற்கான ஆவணங்கள் இல்லை. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், உரிய ஆவணத்தை காட்டி இந்த பணத்தை பெற்றுச்செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.68 ஆயிரம்
இதுபோல் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாமுண்டிபுரத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ.68 ஆயிரத்து 510 இருந்தது. இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவரிடம் உரிய ஆவணம் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story