பொள்ளாச்சி ஜெயராமன் திமுக வேட்பாளர் உள்பட 18 பேர் மீது வழக்கு
தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வரதராஜன் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வரதராஜன் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அ.தி.மு.க.- தி.மு.க. மோதல்
பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வரதராஜனை ஆதரித்து சமூக ஆர்வலர் சபரிமாலா பிரசாரம் செய்தார்.
அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக பேசியதாக தெரிகிறது. இதை அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் தட்டிக்கேட்டனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சியினர் சிலர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி ஜெயராமன்
இந்த சம்பவம் குறித்து தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதில், தி.மு.க. வேட்பாளர் வரதராஜன், சபரிமாலா ஆகியோர் பிரசாரத்திற்கு வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராமன் தூண்டுதலில் பேரில் அ.தி.மு.க.வினர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
எனவே அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் பேரில் துணை சபாநாயகரும், அ.தி.மு.க. வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன், உதவியாளர் வீராசாமி, நாமகிரிராஜ், சதீஷ்குமார், நாகமாணிக்கம், உதயகுமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை மிரட்டல்
அதுபோன்று அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாமகிரிராஜ் வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக பெண்களை கேவலமாக பேசியது தொடர்பாக தி.மு.க.வினரை கேட்டோம். அதற்கு அவர்கள் தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் பேரில் சமூக ஆர்வலர் சபரிமாலா, தி.மு.க.வினர் சின்னான், குமார், சாமிநாதன், சுரேஷ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தி.மு.க.வேட்பாளர்
மேலும் இது தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் வரதராஜன், தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், அவருடைய மகன் தென்றல் மணிமாறன், ஒன்றிய பொறுப்பாளர் மருதவேல், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீதன், ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் மீது கொலை மிரட்டல், தகாதவார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் மொத்தம் இருதரப்பிலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story