‘அடிக்கல் நாட்டியே களைத்து போனவர்களுக்கு ஓய்வு கொடுங்கள்’


‘அடிக்கல் நாட்டியே களைத்து போனவர்களுக்கு ஓய்வு கொடுங்கள்’
x
தினத்தந்தி 29 March 2021 6:46 PM GMT (Updated: 29 March 2021 6:46 PM GMT)

அடிக்கல் நாட்டியே களைத்து போனவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ப.சிதம்பரம் கூறினார்.

காரைக்குடி,

அடிக்கல் நாட்டியே களைத்து போனவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ப.சிதம்பரம் கூறினார்.

தேர்தல் பிரசார கூட்டம்

காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை தாங்கினார். சாக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப. சின்னதுரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-
நடைபெறுகிற தேர்தலின் பின்னால் ஒரு நிழல் யுத்தம் நடைபெறுகிறது. அதில் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் கலாசாரம் ஆகியவற்றில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட அரசியல் கட்சிகள் தி.மு.க. தலைமையில் அணிவகுத்து நிற்கிறோம். இன்னொரு பக்கம் அ.தி.மு.க. பின்னால் அணிவகுக்கும் கட்சிகள். அ.தி.மு.க. தொண்டர்கள் வேண்டா வெறுப்பாக தூக்கிச்சுமக்கிற பல்லக்கில் ஒரு கட்சி பவனி வருகிறது.
ஓய்வு கொடுங்கள்
10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு பயன்தரும் எந்த ஒரு திட்டத்தை தொடங்கி முடித்து வைத்திருக்கிறார்களா?. கடந்த 3 மாதங்களாக பல்வேறு நலத் திட்டங்களுக்கு அவர்கள் அடிக்கல் நாட்டி வருகின்றனர். அடிக்கல் நாட்டிவிட்டால் திட்டப்பணிகள் முடிந்ததாக அர்த்தமில்லை. ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்து அடிக்கல் நாட்டினர். அடிக்கல் நாட்டி விட்டால் காவிரி வந்துவிடுமா?
முதலில் காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்பு நடக்க வேண்டும். அதற்கு ரூ.6 ஆயிரத்து 941 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.ஆனால் ஒரு ரூபாய் கூட இதுவரை செலவு செய்யவில்லை. அடிக்கல் நாட்டியே களைத்துப்போனவர்களுக்கு நீங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும்.

நிர்வாக திறமை

 தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நீர்வளம், கிராமப்புற கட்டமைப்பு, சமூக நீதி என உறுதிமொழிகள் அளித்துள்ளனர். இதனை நிறைவேற்ற தமிழ்நாட்டில் நிதி ஆதாரம் இருக்கிறது. மு.க.ஸ்டாலினிடம் நிர்வாக திறமை இருக்கிறது. நிச்சயம் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நான் உறுதியளிக்கிறேன்.தமிழ் இனத்தை காக்க கை சின்னத்திறகு வாக்களியுங்கள்.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தி மு.க.ஸ்டாலினை முதல்வராக்குங்கள்.
 இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் புதுவயல் நகர தி.மு.க. செயலாளர் பகுருதீன்அலி, காங்கிரஸ் நகர தலைவர் முத்து கண்ணன், வட்டார தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story