கோபி, அந்தியூர், பவானி தொகுதியில் வேட்பாளர் பெயர்-சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கியது


கோபி, அந்தியூர், பவானி தொகுதியில் வேட்பாளர் பெயர்-சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 29 March 2021 9:32 PM GMT (Updated: 29 March 2021 9:32 PM GMT)

கோபி, அந்தியூர், பவானி தொகுதி வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கியது.

கோபி, அந்தியூர், பவானி தொகுதி வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கியது.
கோபி
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. கோபி சட்டமன்ற தொகுதியில் 349 வாக்கு சாவடிகள் உள்ளது. இங்கு 349 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் கூடுதலாக 70 எந்திரங்கள் கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது.
ஒரு எந்திரத்தில் 15 வேட்பாளர்களுக்கும், நோட்டாவிற்கும் தான் இடம் உள்ளது. ஆனால் வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகு கோபி தொகுதியில் 19 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்ந்து மொத்தம் 20 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோபி தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
பெயர்-சின்னம் பொருத்துதல்
அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், அனைத்து கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் உடைக்கப்பட்டு எந்திரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டது.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியும், அந்த எந்திரத்தை கன்ட்ரோல் யூனிட் மற்றும் வி.வி.பேட் எந்திரத்துடன் இணைக்கும் பணியும் நடந்தது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 5 கட்சி வேட்பாளர்கள், 15 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 303 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு வாக்களிக்க தேவையான 606 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. ஓரு வாக்குச்சாவடிக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அந்தியூர் தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோ மேற்பார்வையில் நேற்று நடந்தது. அப்போது கட்சி முகவர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சின்னங்களை சரிபார்த்தனர். மேலும் 20 சதவீத கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களிலும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றன. அப்போது அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, உதவி தேர்தல் அதிகாரி சக்திவேல், அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கவேல் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பவானி
பவானி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 335 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 23 வாக்குச்சாவடிகள் ஆண் வாக்காளர்களுக்கும், 23 வாக்குச்சாவடிகள் பெண் வாக்காளர்களுக்கும் என 2-ஆக பிரிக்கப்பட்டு உள்ளன.  இவற்றில் மொத்தம் 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பவானி தாலுகா அலுவலகத்தில் நேற்று எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்-சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணி பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள், வட்டார தேர்தல் பொறுப்பாளர் தாசில்தார் சரவணன், ராவுத்தர் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேரடியாக வந்து பார்வையிட்டார்.

Next Story