ஏரியூர் அருகே கிராமங்களில் சுற்றித்திரிந்த காட்டு யானை தாக்கி 2 மாடுகள் படுகாயம் பொதுமக்கள் பீதி
ஏரியூர் அருகே கிராமங்களில் சுற்றித்திரிந்த காட்டு யானை தாக்கி 2 மாடுகள் படுகாயம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஏரியூர்:
ஏரியூர் அருகே கிராமங்களில் சுற்றித்திரிந்த காட்டு யானை தாக்கி 2 மாடுகள் படுகாயம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
காட்டு யானை அட்டகாசம்
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதிக்கு வந்தன. இங்கு கடும் வறட்சி நிலவி வருவதால் யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த யானைகள் தற்போது உணவு, தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன.
வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் வருகின்றன. கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒரு ஆண் யானை வனப்பகுதியை ஒட்டி உள்ள ஏரியூர், ஒட்டனூர், நாகமரை, காட்டூர், நெருப்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விளை நிலங்களில் இருந்த பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகிறது.
2 மாடுகள் படுகாயம்
மேலும் இந்த காட்டு யானை காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்தும், உற்சாகமாக குளியல் போட்டும் கிராமங்களில் சுற்றித்திரிகிறது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானை நெருப்பூர் அருகே முத்தையன் கோவில் பகுதியில் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளை தாக்கியது. இதில் 2 மாடுகளும் படுகாயம் அடைந்தன.
இதையறிந்த கிராமமக்கள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். அப்போது அந்த காட்டு யானை கிராம மக்களை விரட்டியது. இதனால் அவர்கள் அலறியடித்து ஓடி வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர். கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த யானையை வனப்பகுதிக்கு விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story