3-வது முறையாக தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பாலமாக இருந்து பணியாற்றுவேன்; தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி
3-வது முறையாக அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பாலமாக இருந்து பணியாற்றுவேன் என்று தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம் செய்தார்.
அறிவுடைநம்பி பிரசாரம்
தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவுடைநம்பி போட்டியிடுகிறார். அவர் தஞ்சை மாநகரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் தஞ்சை 40-வது வார்டியில் உள்ள பாலாஜிநகரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். பாலாஜி நகர், டி.பி.எஸ்.நகர், கூட்டுறவு காலனி, 41-வது வார்டு முழுவதும் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மாலையில் சிவாஜி நகர், அண்ணாநகர், கணபதி நகர் உள்பட 36, 37, 38 ஆகிய வார்டுகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவரை ஆதரித்து பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தமும் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்து பேசினார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
அப்போது வேட்பாளர் அறிவுடைநம்பி பேசியதாவது:-
எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களிடமும் எனக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தால் தான் மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கிறது. கடந்த 5 ஆண்டு காலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளது.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வீட்டிற்கு ஒரு வாஷிங்மெஷின் தருவோம். வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். மாதந்தோறும் குடும்ப தலைவிக்கு ரூ.1,500, குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆண்டுக்கு எரிவாயு சிலிண்டர் 6 இலவசம் என பெண்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி உள்ளார். மேலும் மாணவர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா அறிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். கேபிள் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என நிறைய திட்டங்கள் அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் மக்களை சென்றடைய நான் பாலமாக இருந்து அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
வீட்டுமனை பட்டா
இந்த பகுதியில் வசிக்கும் ஏராளமானோருக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் உள்ளது. அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன். வாரி பகுதிகளில் சாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வாரி பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.மேலும் தஞ்சை தொகுதி வாக்காளர்கள் அனைவரும் அ.தி.மு.க. பக்கமே இருக்கிறார்கள். எனவே அ.தி.மு.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல் தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன். எனவே தஞ்சை தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளருடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் சரவணன், வார்டு செயலாளர்கள் சிவக்குமார், கிருபாகரன், தங்கம், வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர்கள் பழனிவேல், சிவக்குமார், பா.ஜ.க. மாநகர தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் விஜாயகம், பொது செயலாளர் துரைமுருகன், செயலாளர் முரளிதரன், ஒன்றிய தலைவர் தங்கசக்திவடிவேல், மாவட்ட துணை செயலாளர் ஜீவஜோதி, மகளிரணி மாவட்ட செயலாளர் லதா மற்றும் அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story