குடிநீர் பிரச்சினையை தீர்க்க நத்தம் தொகுதியில் 2-வது காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் உறுதி


செங்குறிச்சி பூசாரிபட்டியில் நத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் பிரசாரம்
x
செங்குறிச்சி பூசாரிபட்டியில் நத்தம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் பிரசாரம்
தினத்தந்தி 30 March 2021 10:05 AM GMT (Updated: 30 March 2021 10:05 AM GMT)

நத்தம் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2-வது காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் உறுதி அளித்துள்ளார்.

கோபால்பட்டி,
நத்தம் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2-வது காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் நத்தம் விசுவநாதன் உறுதி அளித்துள்ளார்.

தொலைநோக்கு பார்வை
நத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நேற்று சாணார்பட்டி ஒன்றியம் திருமலைக்கேணி, ஜெ.ஜெ.நகர், குரும்பபட்டி, செங்குறிச்சி, வல்லம்பட்டி பாண்டியனூர் வலசு, மாமரத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நத்தம் தொகுதியில் 4 முறை வெற்றிபெற செய்தீர்கள். அந்த நன்றியை எப்போதும் மறக்கமாட்டேன். மீண்டும் மக்கள்சேவை செய்ய நிற்கும் என்னை 5&வது முறையாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வீர்கள் என நம்புகிறேன். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சாலை, குடிநீர், பள்ளிகள் தரம் உயர்வு, கட்டிட வசதிகள், தடுப்பணைகள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்துள்ளேன். அதேபோல் தொலைநோக்கு பார்வையுடன் துணை மின்நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, மின்மாற்றிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு தேவையான மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

2-வது காவிரி கூட்டுக்குடிநீர்...
இன்னமும் மக்களின் வளர்ச்சிகேற்ப சில பணிகள் எஞ்சியுள்ளன. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அந்த பணிகள் முற்றிலும் நிறைவேற்றப்படும். குறிப்பாக நத்தம் தொகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய ரூ.450 கோடியில் செயல்படுத்தப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தொடர்ச்சியாக 2&வது காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்மூலம் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச வாஷிங்மெஷின், இலவச கேபிள் இணைப்பு, இலவச 150 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500, முதியோர் உதவித்தொகை, சோலார் அடுப்பு உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் இதற்கு பொதுமக்கள் மீண்டும் ஒரு முறை இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் தொடர்ந்து மகிழ்வுடன் வாழுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்மகன் உசேன்
முன்னதாக நத்தம் பஸ்நிலையத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் நத்தம் விசுவநாதனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும். அதற்கு மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்பது அ.தி.மு.க. அரசு தான். சொன்னதையும், சொல்லாததையும் மக்களுக்கு செய்தது அ.தி.மு.க. அரசு தான் என்றார்.

பிரசாரத்தில் நத்தம் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.வி. என் கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.சுப்பிரமணி, செங்குறிச்சி ஊராட்சி தலைவர் மணிமாறன், கூட்டுறவு சங்க தலைவர் பொன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் வசந்திபொன்அழகர், முன்னாள் ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி, நத்தம் நகர செயலாளர் சிவலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சேக்தாவூது, நகர அவைத்தலைவர் சேக்ஒலி, பொருளாளர் சீனிவாசன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story