போடி தொகுதியில் சூறாவளி பிரசாரம்: தமிழக மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. நல்லாட்சி தொடரும் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


போடி தொகுதியில் சூறாவளி பிரசாரம்: தமிழக மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. நல்லாட்சி தொடரும் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2021 12:13 PM GMT (Updated: 30 March 2021 12:13 PM GMT)

தமிழக மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. நல்லாட்சி தொடரும் என்று போடி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி, 

போடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்&அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர் போடி தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்துக்கு செல்லும் இடம் எங்கும் பொதுமக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை செலுத்தியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள குச்சனூர், மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதிகள், பூலானந்தபுரம் ஆகிய இடங்களில் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளில் போடி தொகுதியில் செய்த சாதனைகளை கூறி இரட்டை இலை சின்னத்துக்கு அவர் வாக்குசேகரித்தார்.

தொடர்ந்து மாலையில் போடி வினோபாஜி காலனியில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து ரங்கநாதபுரம், போ.தர்மத்துப்பட்டி, மேலசொக்கநாதபுரம், கீழச்சொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம், போ.அம்மாபட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, சூலப்புரம், மணியம்பட்டி, ராசிங்காபுரம், சமத்துவபுரம், போ.நாகலாபுரம் ஆகிய ஊர்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஓ.பன்னீர்செல்வம் வாக்குசேகரித்தார்.
பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் திரண்டு நின்ற தொண்டர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை வாழ்த்தி கோஷமிட்டனர். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தில் 10 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். சத்துணவு திட்டங்களை தொடங்கி வைத்து எழை, எளிய மக்களுக்கான நல்லாட்சி நடத்தினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா 16 ஆண்டு காலம் பொற்கால ஆட்சி நடத்தினார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தொடங்கி, அந்த திட்டங்களின் முழு பயனும் ஏழை, எளிய மக்களின் கரங்களுக்கு சிந்தாமல், சிதறாமல் கொண்டு சேர்க்கப்பட்டது.

2011-ம் ஆண்டு முதல்- அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்று செய்த சமூக பாதுகாப்பு திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களின் பயனாக, 2016&ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அளிக்கும் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

ஆனால், 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள். ஆட்சிக்கு வந்த பின்பு அதை வழங்கவில்லை. அதனால் தான் நாங்கள் சொல்கிறோம், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது கள்ளநோட்டு. அது செல்லாத நோட்டு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தான் நல்ல நோட்டு.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். கடந்த முறை விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியது போல், இந்த முறை விலையில்லா வாஷிங் மெஷின் வழங்குவோம். முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை ரூ.1,000&ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். தமிழக மக்கள் அ.தி.மு.க. அரசின் நல்லாட்சி தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழக மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. நல்லாட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி வினோபாஜி காலனியில் அ.ம.மு.க.வில் இருந்து விலகி சுமார் 300 பேர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story