தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் வருகை


தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் வருகை
x
தினத்தந்தி 30 March 2021 12:39 PM GMT (Updated: 30 March 2021 12:39 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். அவர்களுக்கு தேர்தல் அதிகாரி செந்தில்ராஜ் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்துக்கு மேலும் 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வந்து உள்ளனர். அவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி செந்தில்ராஜ் அறிவுரை வழங்கினார்.
பாதுகாப்பு படை
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 8 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர் வந்து உள்ளனர். இவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் கலந்து கொண்டு தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை தளவாய் ராஜேஷ் மேகி, கூடுதல் தளவாய்சந்துகுமார் மற்றும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
8 கம்பெனி
பின்னர் தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறும் போது,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே அசாம் மாநிலத்தில் இருந்து 2 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 160 பேர் வந்து இருந்தனர். இந்த நிலையில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து 8 கம்பெனியை சேர்ந்த 584 படை வீரர்கள் நேற்று தூத்துக்குடிக்கு வந்து உள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள தமிழக போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திட்டமிட்டு அவர்களுக்கு வழங்க உள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே
சுழற்சி முறையில் பணியாற்றி வரும் பறக்கும்படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களுடன் மத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
பறக்கும் படை
விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் தலா 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் இயங்கி வருகின்றன. கோவில்பட்டி தொகுதியில் 15 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. ஒரு குழுவுக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் நியமிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவினருடன் எல்லைப் பாதுகாப்பு படையினரும் இணைந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த குழுவினர் வாகன பரிசோதனைகளை மேற்கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி பணமோ, பரிசுபொருட்களோ கொண்டு செல்லப்படுகிறதா என்று கண்காணிப்பார்கள். வாக்குபதிவு நாளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படையினர் பணியாற்றுவார்கள். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார்.

Next Story