ஏழை, எளிய மக்கள் வட்டியில்லா கடன் பெற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - தளவாய்சுந்தரம் தேர்தல் பிரசாரம்


ஏழை, எளிய மக்கள் வட்டியில்லா கடன் பெற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - தளவாய்சுந்தரம் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 30 March 2021 6:30 PM GMT (Updated: 30 March 2021 3:11 PM GMT)

ஏழை, எளிய மக்கள் வட்டியில்லா கடன் பெற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என தளவாய்சுந்தரம் தேர்தல் பிரசாரம் செய்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் முடிவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அவர் நேற்று ஆரல்வாய்மொழி தேவசகாயம் காம்பவுண்ட் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். 
அங்கு ஏராளமான மக்கள் கூடி நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அதன் பிறகு தளவாய் சுந்தரம் அங்கு தரையில் அமர்ந்து கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி தொகுதிக்கு நான் மிக அதிகமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். இந்த தொகுதி மக்கள் அனைவரையும் சாதி, மதம் பாராமல் என்னுடைய சகோதரர்களாக, சகோதரிகளாக நினைத்து செயல்பட்டு வருகிறேன். 3-வது முறையாக அ.தி.மு.க. அரசு அமைய நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரிக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசு ஏழை, எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பல்வேறு சமூக நல திட்டங்களை வாரி வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்ததும் அனைத்து குடும்பங்களுக்கும் 6 கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படும். பெண்களின் பணிச் சுமையை குறைக்கும் விதமாக வாஷிங்மெஷின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும். பெண்களுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். 

மாணவர்களுக்கு 2 ஜி.பி. இலவச டேட்டா ஆண்டு முழுவதும் வழங்கப்படும். அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும். மாவட்டம் தோறும் தொழில் மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7,500 ரூபாய் மானியமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களுக்கான கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து அதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் சுமார் 400 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மக்களின் வரி பணம் முழுவதும் மக்களின் சமூகநல மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மக்களுக்கு அளிக்கப்படுகின்ற ஒரு அரசாக இந்த அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்கள் வட்டியில்லா கடன் பெற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

Next Story