கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலையில் சுத்தியலால் அடித்து மாணவர் கொலை கேலி செய்ததால் சக மாணவர் ஆத்திரம்


கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலையில் சுத்தியலால் அடித்து மாணவர் கொலை கேலி செய்ததால் சக மாணவர் ஆத்திரம்
x
தினத்தந்தி 30 March 2021 8:43 PM IST (Updated: 30 March 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கேலி செய்த ஆத்திரத்தில் சக மாணவர் சுத்தியலால் தலையில் அடித்ததில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த முருகன் மகன் தனசேகரன் (வயது 17). இவர் கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தனசேகரனுக்கும் அதே பள்ளியில் படித்து வரும் 18 வயது சக மாணவருக்கும் இடையே கேலி செய்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது கேலி செய்தது தொடர்பாக பள்ளி வளாகத்தில் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். 
சுத்தியலால் அடித்தார்
அப்போது ஆத்திரம் அடைந்த சக மாணவர் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் தனசேகரனின் தலையில் அடித்தார். இதில் தனசேகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ரத்தம் அதிக அளவில் வெளியேறி மயக்கம் அடைந்தார். இதையடுத்து தனசேகரனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனசேகரனுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இதுகுறித்து கண்டமனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சகமாணவரை பிடித்து விசாரித்தனர். மேலும் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பழனி சிறையில் அடைத்தனர்.
சாவு
இதனிடையே தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தனசேகரன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு  தனசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். 
இதைத்தொடர்ந்து ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சக மாணவர் மீது கண்டமனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
சாலைமறியல்
இதற்கிடையே தனசேகரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை கண்டமனூருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது பிணத்துடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டமனூரில் உள்ள தேனி சாலையில் மாலை 4.30 மணியளவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் கொடுவிலார்பட்டி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
இந்தநிலையில் கண்டமனூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் கண்டமனூருக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
பரபரப்பு
அப்போது பொதுமக்கள், உயிரிழந்த தனசேகரனின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பள்ளியின் தலைமையாசிரியரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அரசு நிவாரணத்தொைக கிடைக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கவும் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் உறுதி கூறினார். அதன்பேரில் பொதுமக்கள் இரவு 8 மணியளவில் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story