வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்
கடலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 9 தொகுதிகளிலும் 137 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் 9 தொகுதிகளுக்கும் ஏற்கனவே விருத்தாசலம் சேமிப்பு கிடங்கில் இருந்து பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு 227 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள 343 வாக்குச்சாவடிகளுக்கும் தலா 343 வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரங்கள் கடலூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
வேட்பாளர், சின்னம் பொருத்தும் பணி
இந்நிலையில் நேற்று அந்த எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கதவு ‘சீல்’ வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரன் தலைமையில் அகற்றப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பெயர் பட்டியல், நோட்டா என வரிசைபடி 16 பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
இந்த பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பலராமன், தேர்தல் துணை தாசில்தார் வெற்றிச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வேட்பாளர்கள், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜா, தி.மு.க. சார்பில் வக்கீல்கள் சிவராஜ், வனராஜ், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story