ரத்தினவேல் முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட 1 எலுமிச்சை பழம் ரூ.59 ஆயிரத்துக்கு ஏலம்


ரத்தினவேல் முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட 1 எலுமிச்சை பழம் ரூ.59 ஆயிரத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 30 March 2021 5:00 PM GMT (Updated: 30 March 2021 5:00 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரத்தினவேல் முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட 1 எலுமிச்சை பழம் ரூ.59 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

அரசூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் முதல் 9 நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவின் போது இரட்டை குன்றின் மீது அமைந்துள்ள முருகன் அருகில் வைக்கப்பட்டுள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் 9 நாட்களும் வைத்து பூஜை செய்யப்படும். இந்த பழங்கள் 11-ம் நாள் விழா இரவில் ஏலம் விடப்படுவது வழக்கம். 

குழந்தை வரம் 

அதன்படி நேற்று முன்தினம் இரவு எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. முன்னதாக இடும்பன் சாமிக்கு கருவாடு சோறு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், எலுமிச்சை பழங்களை ஒவ்வொன்றாக நாட்டாண்மை பாலகிருஷ்ணன் ஏலம் விட்டார். 

இதை உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏலம் எடுத்தனர். குழந்தையில்லாத தம்பதியினர், வியாபாரம் செய்பவர்கள், வீடுகட்ட முயல்பவர்கள், தொழில் செய்ய முனைவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் என பலரும் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.  ஏலம் எடுப்பவர்களுக்கு எலுமிச்சை பழத்துடன் ஒரு உருண்டை கருவாடு சாதம் வழங்கப்பட்டது. 

ரூ.1,43,900-த்திற்கு ஏலம்

இதில் முதல் நாள் எலுமிச்சை பழத்தை கடலூர் கூத்தப்பாக்கம் நாராயணன்- வளர்மதி தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி ரூ.59 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 2-ம் நாள் பழத்தை முதலூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ரூ.19 ஆயிரத்துக்கும், 3-ம் நாள் பழத்தை டி.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ரூ.25 ஆயிரத்துக்கும் எடுத்தனர்.

இதேபோல் 4-ம் நாள் பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஆரோவில் தம்பதியினர் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், 5-ம் நாள் பழத்தை புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த தம்பதியினர் ரூ.11 ஆயிரத்துக்கும், 6-ம்நாள் பழத்தை கடலூர் சாவடியை சேர்ந்த தம்பதியினர் ரூ.2 ஆயிரத்து 300-க்கும், 7-ம் நாள் பழத்தை கிழக்குமருதூர் தம்பதியினர் ரூ.5 ஆயிரத்துக்கும், 8-ம் நாள் விழா பழத்தை ஒட்டனந்தல் தம்பதியினர் ரூ.4 ஆயிரத்து 200-க்கும், 9-ம் நாள் விழா பழத்தை செட்டிப்பாளையம் தம்பதியினர் ரூ.3 ஆயிரத்து 900-க்கும் ஏலம் எடுத்தனர். இதன் மூலம் மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 ரூபாய்க்கு எலுமிச்சை பழங்கள் ஏலம் போனது.

நேர்த்திக்கடன்

இதில் கடந்த 2019-ம் ஆண்டில் எலுமிச்சை பழங்களை ஏலம் எடுத்தவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

Next Story