கொரோனா 2-வது அலை எதிரொலி: சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் திருச்சி ரெயில் நிலையத்தில் குவிந்தனர்


கொரோனா 2-வது அலை எதிரொலி: சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் திருச்சி ரெயில் நிலையத்தில் குவிந்தனர்
x
தினத்தந்தி 30 March 2021 8:29 PM GMT (Updated: 30 March 2021 8:29 PM GMT)

கொரோனா 2-வது அலை எதிரொலியாக திருச்சியில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் ரெயிலில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.

கொரோனா 2-வது அலை எதிரொலி:
சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்
திருச்சி ரெயில் நிலையத்தில் குவிந்தனர்
திருச்சி, மார்ச்.31-
கொரோனா 2-வது அலை எதிரொலியாக திருச்சியில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் ரெயிலில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். 

கொரோனா ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளிகள், வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பஸ், ரெயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன.

இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பலர் வேலை பறிபோய் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு வெகுவாக தளர்த்தப்பட்டது. 

2-வது அலை

வட மாநில தொழிலாளர்கள் மீண்டும் குடும்பத்துடன் தமிழகம் வந்து பணிகளை தொடர்ந்தனர். தற்போது முற்றிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் முககவசம் அணிவதும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது
கொரோனா 2-வது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டனர்

குறிப்பாக தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என வதந்திகள் பரவி வருகிறது. அதாவது சட்டசபை தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரவுகிறது. 

இதனால் தமிழக மக்கள் மட்டுமின்றி, வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநிலத்தவர்கள் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக நேற்று திருச்சி ரெயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குவிந்தனர்.

தாங்கள் வீட்டு உபயோக பொருட்களான அண்டா, பேரல், கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் உடைமைகளுடன் குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரம் நிரம்பி வழிந்தது.
எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம்
பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் தற்போது சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது.

 தேர்தலில் வாக்களிப்பதற்காக அந்த மாநிலத்தை சேர்ந்த பலர் வாக்களிக்கும் நோக்கத்தில் சொந்த ஊருக்கு பயணம் செய்து உள்ளனர்.  மேலும் தேர்தல் முடிந்ததும் கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கருதுகிறோம். 
எப்படியும் ஒரு மாதமாவது சொந்த ஊரில் இருந்துவிட்டு மீண்டும் பணிக்கு திரும்புவோம், என்றனர்.

Next Story