முதியோர், மாற்றுத்திறனாளிகள் 791 பேர் தபால் ஓட்டு போடவில்லை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்


முதியோர், மாற்றுத்திறனாளிகள் 791 பேர் தபால் ஓட்டு போடவில்லை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 April 2021 12:43 AM GMT (Updated: 3 April 2021 12:43 AM GMT)

சென்னையில் தபால் வாக்குக்கு விண்ணப்பித்த முதியோர், மாற்றுத்திறனாளிகளில் 791 பேர் ஓட்டு போடவில்லை என்றும், அவர்களுக்கு இனி மறுவாய்ப்பு கிடையாது என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணல் சிற்பத்தை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் கடந்த தேர்தல்களில் குறைவான ஓட்டு சதவீதம் பதிவான இடங்களில் ஆசிரியர்கள் மூலம் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்திலேயே குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள மாவட்டமாக சென்னை உள்ளது.

ரூ.52 கோடி பறிமுதல்

அனைத்து நிறுவனங்களும், வருகிற 6-ந்தேதி ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நாளை (அதாவது இன்று) இறுதி பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 435 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 422 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டன. 4 புகார்கள் நிலுவையில் உள்ளன. மீதம் உள்ளவை போலி புகார்கள். ஒரு வேட்பாளரின் உறவினர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டு உள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வந்தது. 20 நிமிடங்களில் அங்கு சென்று பறக்கும் படை சோதனை நடத்தியதில் அது பொய் என தெரியவந்தது

தற்போதைய நிலையில் ரூ.52 கோடி வரை சென்னை மாவட்டத்தில் பணம், பரிசு பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தினமும் சென்னையில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது.

791 பேர் ஓட்டு போடவில்லை

சென்னையில் 3 ஆயிரம் போலீசார் வரை தபால் ஓட்டு போட்டுள்ளனர். சென்னையில் 4 தொகுதிகளில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீஸ் உளவுத்துறை பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவற்றின் பெயர்களை வெளிப்படையாக கூற முடியாது.

சென்னையில் 6 ஆயிரத்து 591 முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளித்துள்ளனர். 791 பேர் ஓட்டு போடவில்லை. அவர்களுக்கு இனி மறு வாய்ப்பு வழங்கப்படாது.

பிரசார கூட்டங்களில் முககவசம் அணிவது தொடர்பாக அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை கண்காணிப்பது மட்டுமே எங்கள் பணி இல்லை. தேர்தல் தொடர்பான நிறைய பணிகள் உள்ளன. கொரோனாவுக்கு வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய 6 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர்.

ஏப்ரல் இறுதிக்குள்...

250 வீடுகளுக்கு ஒரு நபர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வார். ஒரு நாளுக்கு 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம்.

மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து தேர்தலின் பிறகு சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளோம்.

பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த கசப்பான அனுபவத்தை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story