கோவில்பட்டி தொகுதியில் 70 சதவீத வாக்குளை பெறுவேன் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


கோவில்பட்டி தொகுதியில் 70 சதவீத வாக்குளை பெறுவேன் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 6 April 2021 12:55 PM GMT (Updated: 6 April 2021 12:55 PM GMT)

கோவில்பட்டி தொகுதியில் 70 சதவீத வாக்குகளை பெறுவேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி:
3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். 70 சதவீத வாக்குகளை நான் பெறுவேன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
அமைச்சர் ஓட்டு போட்டார்
கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலையில் தனது மனைவி இந்திரா காந்தி, மகன் அருண்குமார் ஆகியோருடன் தனது சொந்த ஊரான சிதம்பரத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
70 சதவீத வாக்குகளை பெறுவேன்
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து 3-வது முறையாக அமையும். அதற்கு கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் எனது வெற்றி முதல் அடித்தளமாக அமையும். இந்த தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 70 சதவீதம் எனக்கு பதிவாகும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். தொகுதிக்கு நான் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அனைத்து சமுதாய மக்களும் ஒரு தாய் மக்களாக வாழும் நிலையை நான் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கி உள்ளேன். அதேபோல் வியாபாரிகள் 10 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தோம் என்ற மனநிறைவு எங்களுக்கு போதும் என தாங்களாக முன்வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கான தீர்வு மே 2-ந் தேதி கண்கூடாக தெரியும் நிலையை நான் வாக்காளர்களிடம் பார்க்கிறேன்.
கோவில்பட்டியில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தேவையான கோப்புகள் தயாராகிவிட்டன. ரூ.28 கோடியில் அரசு செவிலியர் கல்லூரி அமைய அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உள்ளது. நான் வெற்றி பெற்றதும் இந்த பணிகளை துரிதப்படுத்துவேன். அதேபோல் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் மலைப்பகுதியில் 135 அடி உயர முருகன் சிலை அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் செண்பகவல்லி அம்பாள் கோவில் கொடி மரத்துக்கு தங்க முலாம் அமைக்கும் பணி, கயத்தாறு முத்து கிருஷ்ணன் ஈஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பேன்.
புதிய மாவட்டம்
 கோவில்பட்டியை தலைநகராகக் கொண்டு மாவட்டம் உருவாக்குவேன். நான் கூறியதை தான் மற்ற வேட்பாளர்களும் சொல்கின்றனர். புவிசார் குறியீடு பெற்றுள்ள கடலைமிட்டாய் சத்துணவு திட்டத்தில் இணைக்க அமையப்போகும் அ.தி.முக. அரசு மூலம் முயற்சி எடுப்பேன். தமிழகத்தில் 140 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மக்களின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும். நிச்சயமாக இந்த ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் ெதரிவித்தார்.

---------------

Next Story