50 சதவீத சமூக இடைவெளியுடன் விழாக்கள் நடத்த அனுமதிக்ககோரி காஞ்சீபுரம், செங்கல்பட்டில் ஒளி, ஒலி, பந்தல் அமைப்பு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு


50 சதவீத சமூக இடைவெளியுடன் விழாக்கள் நடத்த அனுமதிக்ககோரி காஞ்சீபுரம், செங்கல்பட்டில் ஒளி, ஒலி, பந்தல் அமைப்பு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 April 2021 10:29 AM GMT (Updated: 20 April 2021 10:29 AM GMT)

50 சதவீத சமூக இடைவெளியுடன் விழா, நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கோரி, ஒளி, ஒலி, பந்தல் அமைப்பு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஒளி, ஒலி, பந்தல் அமைப்பு தொழிலாளர்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் குறைந்தபட்சம் 6 ஆயிரம் பேர்கள் ஒலி, ஒளி அமைத்தல், பந்தல் மேடை மற்றும் டெக்ரேஷன் தொழில் செய்து வருகின்றார்கள் . தற்போதைய கொரோனா ஊரடங்கில் திருவிழா நிகழ்ச்சியில் வண்ண விளக்குகள், கட் அவுட், ஒலி ஒளி அமைக்க குறைந்தபட்சம் 50 சதவீத சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க கோரி, தமிழ்நாடு ஒலி ஒளி அமைப்பு தொழிலாளர் நலச் சங்கத்தின் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் நாவளன் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.அதேபோல், காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள பந்தல், பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரங்கள் உள்ளிட்டோரை ஒன்றிணைத்து காஞ்சீபுரம் மாவட்ட சப்ளையர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்கள் நலச் சங்கம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இச்சங்கம் சார்பில் திருமண மண்டபங்களில் 50 சதவீத விருந்தினர்களுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

கோரிக்கை மனு
இதில் சங்க கவுரவத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் தலைவர் டில்லி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருமண மண்டபத்தில் விசேஷங்கள், விழாக்கள் நடைபெறும் காலமான ஏப்ரல், மே, ஜூன் காலங்களில், விஷேசங்கள் தொடர்பான தொழில்களை நம்பி ஏராளமான கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் குறைந்த அளவில் வருமானம் ஈட்டி வாழ்ந்து வருகின்றனர்.தற்போது மீண்டும் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சிறப்பு அனுமதி அளித்து வாழ்வாதாரத்தை மீட்டு தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

செங்கல்பட்டு
அதேபோல், தமிழ்நாடு ஒலி, ஒளி, பந்தல் அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் 50-க்கு மேற்பட்டவர்கள் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிசை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர்.அதில், குறைந்தபட்ச அனுமதியுடன் கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்த அனுமதித்து ஒலி,ஒளி அமைப்பு உள்ளிட்ட தொழில் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அதில் தெரிவித்து இருந்தனர்.


Next Story