மறைமலைநகர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: திருச்சி கோர்ட்டில் மேலும் 6 பேர் சரண்


மறைமலைநகர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: திருச்சி கோர்ட்டில் மேலும் 6 பேர் சரண்
x
தினத்தந்தி 27 April 2021 6:49 PM GMT (Updated: 27 April 2021 6:49 PM GMT)

மறைமலைநகர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட மேலும் 6 பேர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர்.

திருச்சி, 

மறைமலைநகர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட மேலும் 6 பேர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர்.

வெடிகுண்டு வீசி கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கண்ணதாசன் நகரைச்சேர்ந்தவர் திருமாறன் (வயது 50). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள கோவிலில் சாமிகும்பிட்டு வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே திருமாறன் இறந்தார். 

அப்போது அவருக்கு பாதுகாப்பாக உடன் வந்த போலீஸ்காரர், வெடிகுண்டு வீசிய நபரை துப்பாக்கியால் சுட்டதில் அந்த வாலிபரும் இறந்தார். விசாரைணயில் அந்த வாலிபர் திருவள்ளூர் ஆத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. அவருடன் வந்த கூட்டாளிகள் தப்பிஓடிவிட்டனர். 

தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் தொழில் போட்டி காரணமாக நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர்.

மேலும் 6 பேர் சரண்

இதற்கிடையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் (48) என்பவர் நேற்று முன்தினம் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை கோர்ட்டு உத்தரவுப்படி துறையூர் கிளை சிறையில் அடைத்து உள்ளனர்.

இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களில் மேலும் 6 பேரான சரண் (20), ரமேஷ் (26), குணசேகரன் (21), முருகன் (20), மகேஷ் (32), அஜீத் (21) ஆகியோர் நேற்று திருச்சி 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர்.  அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார்.

Next Story