கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரியை பயன்படுத்த நடவடிக்கை
கோலார் தங்கவயலில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று முனிசாமி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
கோலார்: கோலார் தங்கவயலில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று முனிசாமி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
முனிசாமி எம்.பி.
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக எடுத்து வருகிறது. பல தாலுகாக்களில் படுக்கை உளளிட்ட பல்வேறு வசதிகள் பற்றாக்குறை இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் கோலார் தங்கவயல் தாலுகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. கோலார் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. முனிசாமி தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று கோலார் தங்கச்சுரங்க நிர்வாகத்திற்கு சொந்தமான பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
1,000 படுக்கைகள்
ஆய்வுக்கு பின் முனிசாமி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கொரோனா பாதித்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 1,000 படுக்கை வசதிகள் இங்கு உள்ளன. இதனால், படுக்கை வசதி உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் அளிக்கப்படும்.
இந்த ஆஸ்பத்திரியில் புனரமைப்பு பணிகள் முடிந்த பின்னர், மத்திய சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை அழைத்து வந்து ஆஸ்பத்திரியின் நிலை குறித்து நேரில் விவரித்து கூறப்படும். மத்திய சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆஸ்பத்திரியை மாநில அரசு நிர்வகிக்கும் வகையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் செல்வமணி ஆய்வு
முன்னதாக கோலார் மாவட்ட கலெக்டர் செல்வமணி ஆஸ்பத்திரிக்கு வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரியை கொரோனா சிகிச்சை பிரிவு மையமாக மாற்றுவது பற்றி மாநில அரசுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரியை திறந்து ஆய்வு செய்யப்படுகிறது என்ற தகவலை அறிந்த தங்கவயல் நகர மக்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் வந்து பார்த்தனர். மீண்டும் ஆஸ்பத்திரியை திறப்பதற்கு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story